சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளது


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளது
x
தினத்தந்தி 5 Aug 2018 4:30 AM IST (Updated: 5 Aug 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளது என்று தர்மபுரியில் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

தர்மபுரி,

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் பொதுவாக 50 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெறுவது வழக்கம். ஆனால் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் 76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது. பல்கலைக்கழக தேர்வில் 5 மதிப்பெண் பெற்றவருக்கு கூட விடைத்தாள் 2-வது மறுமதிப்பீட்டில் 75 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ரூ.1,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இந்த ஊழலால் களங்கம் ஏற்பட்டுள்ளது.

விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலுக்கு சில அதிகாரிகளை மட்டும் பலிகடாவாக்கி விட முடியாது. உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு தெரிந்தே இந்த ஊழல்கள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே உயர்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். உயர்கல்வி துறை செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தரான கவர்னர் இந்த ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும். மாவட்டங்களில் ஆய்வு நடத்த செல்லும் தமிழக கவர்னர் முதலில் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தி ஊழலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 8 வழி பசுமை சாலை திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் இந்த திட்டத்திற்காக 745 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதனால் 8 வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து பா.ம.க. தொடர்ந்து போராடும். மரபுகளும், மரபுவழி மருத்துவமும் சிறப்பானது. ஆனால் நவீன காலத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியின்றி மகப்பேறு சிகிச்சை பார்ப்பது ஆபத்தானது. இத்தகைய போக்கை உடனடியாக கைவிட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பா.ம.க. ஒருபோதும் ஆதரிக்கவில்லை. வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் பிற சமுதாயங்களை சேர்ந்தவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு.

வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றவும் அதை 9-வது அட்டவணையில் சேர்க்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தவறான முடிவாகும். இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அரசு பணிகளில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வில் 22.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை பா.ம.க. வரவேற்கிறது. இதேபோல் கடந்த சில நூற்றாண்டுகளாக சுரண்டலுக்கு உள்ளாகி உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கும் பதவி உயர்வில் உரிய இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோவிலை மதச்சார்பற்றதாக அமைக்க வேண்டும். குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்கள் அந்த கோவிலில் இடம்பெற அனுமதிக்ககூடாது.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

அப்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Next Story