வேலூர் ஜெயிலில் இருந்து மேலும் 24 பேர் விடுதலை


வேலூர் ஜெயிலில் இருந்து மேலும் 24 பேர் விடுதலை
x
தினத்தந்தி 5 Aug 2018 4:30 AM IST (Updated: 5 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஜெயிலில் இருந்து நேற்று மேலும் 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வெளியே வந்த அவர்கள் ‘சிறை வாழ்க்கை எங்களுக்கு பல்வேறு பாடங்களை கற்று கொடுத்துள்ளது’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

வேலூர்,

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருக்கும் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி வேலூர் மத்திய ஜெயிலில் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் குறித்த பட்டியல் தமிழக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து முதற்கட்டமாக ஆயுள் தண்டனை கைதிகள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பொன்னுரங்கன், அன்பு, மது, முருகன், ஏகாம்பரம், துரை, ஆறுமுகம், சாமிநாதன், அரிசிவம், கோவிந்தசாமி, ராமர், மகேந்திரமணி, செந்தில், நாராயணன், கோவிந்தராஜ், குமார், முனிரத்தினம், முனுசாமி, சேட்டு, குப்பன், சிவக்குமார், சந்திரன், மணி, மகேந்திரன் ஆகிய 24 பேரையும் விடுதலை செய்வதற்கான ஆணை நேற்று முன்தினம் இரவு ஜெயிலுக்கு வந்தது. இதுகுறித்து அவர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து 24 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று அதிகாலையிலேயே வந்து ஜெயில் வாசல் முன்பாக காத்திருந்தனர். காலை 6.30 மணியளவில் ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) முருகேசன், 24 பேருக்கும் அவர்களது உடமைகள், ஒரு வாரத்துக்கு தேவையான உணவுப்பொருட்கள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தார்.

ஜெயிலுக்கு வெளியே காத்திருந்த கைதிகளின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அவர்களை கண்டதும் கண்ணீர் மல்க கட்டியணைத்து வரவேற்றனர்.

விடுதலையாகி வெளியே வந்தவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

மதுபோதை மற்றும் சூழ்நிலை காரணமாக தவறுகள் செய்து விட்டு, ஜெயிலில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவித்தோம். ஜெயிலில் எங்களுக்கு பல தொழில்கள் கற்று கொடுக்கப்பட்டன. மனைவி, குழந்தைகள், பெற்றோரை பிரிந்து மிகவும் கஷ்டப்பட்டோம்.

பீடி, சிகரெட், மது போன்ற கெட்ட பழக்க வழக்கங்களை விட்டு விட்டோம். ஜெயில் வாழ்க்கை எங்களை புதுமனிதனாக மாற்றியுள்ளது. மேலும் பல்வேறு பாடங்களை கற்று கொடுத்துள்ளது. ஜெயிலில் கற்றுக்கொடுத்த தொழில்கள் எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் உற்சாகத்துடன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தங்கள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். 

Next Story