கும்பகோணம் அருகே பழவாறு கதவணையில் இறங்கி விவசாயிகள் கருப்புக்கொடியுடன் போராட்டம்


கும்பகோணம் அருகே பழவாறு கதவணையில் இறங்கி விவசாயிகள் கருப்புக்கொடியுடன் போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2018 4:30 AM IST (Updated: 5 Aug 2018 11:14 PM IST)
t-max-icont-min-icon

பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி கும்பகோணம் அருகே உள்ள பழவாறு கதவணையில் இறங்கி விவசாயிகள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கபிஸ்தலம்,


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது ஏரகரம் கிராமம். இங்கு உள்ள பழவாற்றில் கதவணை உள்ளது. இதன் மூலமாக 555 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கதவணையின் மூலமாக முழு அளவில் பாசனத்துக்கு தண்ணீர் கிடைத்து 20 ஆண்டுகளாகிவிட்டன.

ஏரகரம் பாசன வாய்க்கால், கண்டகரயம் பாசன வாய்க்கால், சீதாதேவி பாசன வாய்க்கால், அர்சன வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. இதனால் ஏரகரம், வாலபுரம், பரட்டை ஆகிய கிராமங்களில் விவசாயம் கடுமைபாக பாதிக்கப்பட்டுள்ளது.


ஏரகரம் பகுதியில் உள்ள வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி, பழவாறு கதவணை மூலமாக பாசனம் பெறும் பகுதிகளில் விவசாயம் செழிக்க உதவ வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று ஏரகரம் பழவாறு கதவணையில் இறங்கி விவசாயிகள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்துக்கு விவசாயிகள் சாமிநாதன், தங்கையன் ஆகியோர் தலைமை தாங்கினர். தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமலாநாதன், சவுந்தர்ராஜன், சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பழவாற்றில் பாசனத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரகரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தின்போது கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story