எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக இருக்கும் வரை அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது, அன்வர்ராஜா எம்.பி. பேச்சு


எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக இருக்கும் வரை அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது, அன்வர்ராஜா எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 6 Aug 2018 3:15 AM IST (Updated: 5 Aug 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக இருக்கும் வரை அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்று அன்வர்ராஜா எம்.பி. பேசினார்.

பனைக்குளம்,

மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான அன்வர்ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:–

 மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் ஒரு மாநாட்டில் அரங்கம் முழுவதும் நிர்வாகிகள் கலந்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க. தான் தி.மு.க.வை இயக்குகிறது. தி.மு.க.வை இயக்குவது யார் தெரியுமா? ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றுச்சென்ற கருப்பசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், சத்தியமூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற பல்வேறு நிர்வாகிகள் தான். அ.தி.மு.க. கட்சி பதவிக்கும், சின்னம், கொடி ஆகியவற்றுக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதன் தான் நமது தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க.வின் பக்கம் உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக இருக்கும் வரை இந்த ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. இந்த அரசு இருக்கும் வரை கட்சி வளர்ந்து கொண்டு தான் இருக்கும். மக்களிடம் யார் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும். எம்.ஜி.ஆர். எப்படி வெற்றி பெற்றார் என்றால் மக்கள் நம்பிக்கை தான் அவருக்கு முழுமையான வெற்றியை கொடுத்தது. எம்.ஜி.ஆர். நாட்டு மக்களுக்கு எத்தனையோ பணிகள், தர்மங்கள் செய்துள்ளார். ஆனால் அவர் நமக்கெல்லாம் செய்த தர்மம் ஜெயலலிதாவை அறிமுகம் செய்து வைத்தது தான்.

அ.தி.மு.க. மத்திய அரசுக்கு அடிமையாக செயல்படுகிறது என செய்திகள் வருகின்றன. தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது யார் செய்தாலும் நாங்கள் ஆதரிப்போம். பிரதமர் மோடி மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நல்ல நண்பர். அவர் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்ளும் நிகழ்வில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று வெளிப்படையாக கூறினார். இதுபோல் மத்திய அரசு கொண்டு வரும் விரும்பத்தகாத திட்டங்களை அ.தி.மு.க. அரசு எதிர்த்து வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சீல் வைத்து அந்த திட்டத்தை முழுமையாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்த்து வருகிறார். அ.தி.மு.க. தற்போது மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவ்வாறு உறுப்பினர்களாக சேருபவர்களிடம் ரூ.5 பெற்றுக்கொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்க வேண்டும். அப்போது தான் அவர்கள் திறமையாக செயல்படுவார்கள். நிர்வாகிகளிடம் உள்ள உறுப்பினர் அட்டைகளை உடனடியாக உரியவரிடம் கொடுத்துவிடுங்கள். உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது அ.தி.மு.க. அல்ல. தி.மு.க. தான் தேர்தலை நிறுத்தியது. எந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story