தமிழக அரசு ரூ.39½ கோடி மானியம் வழங்கி உள்ளதால் டேன்டீயில் தற்காலிக தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்
டேன்டீக்கு ரூ.39½ கோடி மானியத்தை தமிழக அரசு வழங்கி உள்ளதால் தற்காலிக தொழிலாளர்களுக்கு டேன்டீயில் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலூர்,
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக (டேன்டீ) தொழிலாளர்களின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பேரவை கூட்டம் கூடலூர் நாடார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி இப்ராகீம், ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் தங்கராஜ், அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க அமைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:–
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் டேன்டீயில் பணியாற்றி வரும் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, டேன்டீ நிர்வாகத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் தமிழக முதல்–அமைச்சர், வனத்துறை செயலாளர் ஆகியோருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தது.
இதை ஏற்று டேன்டீ நிர்வாகத்துக்கு தமிழக அரசு ரூ.39½ கோடி மானியம் வழங்கி உள்ளது. இதனால் பொருளாதார நிதி நெருக்கடியில் உள்ள டேன்டீ தொடர்ந்து செயல்பட வழிவகை கிடைத்து உள்ளது. இதேபோல் டேன்டீயில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டது. எனவே அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனைதொடர்ந்து டேன்டீக்கு ரூ.39½ கோடி மானியம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. இலங்கை– இந்திய ஒப்பந்தப்படி தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலைவாய்ப்பும், சொந்த வீடும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக 2,500 குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்வது. ரூ.39½ கோடி மானியம் வழங்கி உள்ளதால் டேன்டீயில் தற்காலிக தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய விடுப்பு ஊதியம், பணிக்கொடை, குறைந்த பட்ச ஊதியம், நிலுவை தொகை உள்ளிட்ட பணபலன்களை உடனடியாக டேன்டீ நிர்வாகம் வழங்க வேண்டும். டேன்டீயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். டேன்டீ நிலங்களை வனத்துறைக்கு ஒப்படைக்க முன்வருவதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் டேன்டீ தொழிற்சங்க தலைவர்கள் பாண்டியன், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.