புதிய சம்பள ஒப்பந்தம் செய்யக்கோரி தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டம்


புதிய சம்பள ஒப்பந்தம் செய்யக்கோரி தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2018 3:45 AM IST (Updated: 6 Aug 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

புதிய சம்பள ஒப்பந்தம் செய்யக்கோரி, தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டம் தொடங்குகிறார்கள்.

கோவை,

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய பஞ்சாலை கழகத்தின் (என்.டி.சி.) கீழ் 7 மில்கள் உள்ளன. கோவையில் கம்போடியா, பங்கஜா, சி.எஸ். அண்ட் டபிள்யூ, முருகன், ரங்கவிலாஸ் ஆகிய 5 மில்களும், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காளியப்பா மில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பயோனியர் மில்லும் இயங்கி வருகின்றன.

இந்த மில்களில் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களாக 4 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். தேசிய பஞ்சாலை கழகம், தொழிற்சங்கங்கள் இடையேயான சம்பள ஒப்பந்தம் கடந்த மே மாதம் 31–ந்தேதியுடன் முடிவடைந்தது. புதிய சம்பள ஒப்பந்தம் போடுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த 2–ந் தேதி சென்னையில் உள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி முறையிட்டனர். இதைத்தொடர்ந்து மத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள் சம்பள ஒப்பந்தம் குறித்து வருகிற 16–ந்தேதி கோவையில் உள்ள தேசிய பஞ்சாலைக்கழக மண்டல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற தெரிவித்தனர். இதனை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் கோவை ஐ.என்.டி.யு.சி. பஞ்சாலை சங்கத்தில் தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சீனிவாசன், பாசமலர் சண்முகம், ஆறுச்சாமி (ஐ.என்.டி.யு.சி.), பார்த்தசாரதி, நாகேந்திரன் (எல்.பி.எப்.), பத்மநாபன், சேவியர்(சி.ஐ.டி.யு.), தனகோபால், கோபால் (ஏ.டி.பி.) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி வருகிற 16–ந்தேதி மத்திய தொழிலாளர்துறையின் பேச்சுவார்த்தையிலும், 18, 19–ந்தேதிகளில் தேசிய பஞ்சாலைக்கழக அதிகாரிகளின் பேச்சுவார்த்தையிலும் பங்கேற்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

கோரிக்கையை வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) முதல் 7 தேசிய பஞ்சாலைகளிலும் கூடுதல் பணிநேரம் வேலை செய்வதை (ஓவர்டைம்) தவிர்த்து போராட்டத்தை தொடங்குவது என்றும், வருகிற 13–ந்தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் கோரிக்கை முழக்க போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், வருகிற 16, 17, 18–ந்தேதிகளில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எடுக்கப்படாவிட்டால் வருகிற 20–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குவது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story