காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார மோதல் ப.சிதம்பரம் பாதியில் வெளியேறினார்


காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார மோதல் ப.சிதம்பரம் பாதியில் வெளியேறினார்
x
தினத்தந்தி 5 Aug 2018 11:00 PM GMT (Updated: 5 Aug 2018 7:43 PM GMT)

புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சமாதான முயற்சி தோல்வியில் முடிந்ததால் ப.சிதம்பரம் பாதியில் வெளியேறினார்.

புதுக்கோட்டை,

காங்கிரஸ் கட்சியின் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒரு பூத் கமிட்டிக்கு 20 முதல் 30 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்த பூத் கமிட்டியில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 பேர் இருக்க வேண்டும். பெண்கள், பிறமதத்தவர்கள், எஸ்.சி., எஸ்.டி.யை சேர்ந்தவர்கள் போன்றவர்களையும் கமிட்டியில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசி முடித்த சிறிது நேரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜுக்கும், மாவட்ட துணை தலைவர் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது தமிழ்ச்செல்வன், புஷ்பராஜ் சாதி அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். இதனை கவனித்த ப.சிதம்பரம் தனது நாற்காலியில் இருந்து எழுந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 பேரையும் சமாதானம் செய்தார்.

அப்போது ப.சிதம்பரம், நான் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்திற்காக தான் வந்துள்ளேன். மற்ற பிரச்சினையை பிறகு பேசி கொள்ளலாம் என்றார். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து ஒருவரையொருவர் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை வெளியே அனுப்பி வைத்து விட்டு, அலுவலகத்தை உட்புறமாக பூட்டிக் கொண்டு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இருப்பினும் அவர்கள் இடையே சலசலப்பு ஓயவில்லை.

இதையடுத்து சமாதான முயற்சி தோல்வியில் முடிந்ததால் ப.சிதம்பரம் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறி சென்றார். இதை தொடர்ந்து கூட்டம் பாதியிலேயே முடிந்தது. அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளும் வெளியே வந்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் ராமசாமி, தெற்கு மாவட்ட தலைவர் தர்ம.தங்கவேலு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் முன்னாள் மத்திய நிதி மந்திரி பாதியில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story