போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து ஏட்டு மீது தாக்குதல் 3 பேர் கைது


போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து ஏட்டு மீது தாக்குதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2018 10:00 PM GMT (Updated: 5 Aug 2018 7:54 PM GMT)

கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து ஏட்டு மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி, 


கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கச்சிராயப்பாளையம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரை சேர்ந்த முனாப் மகன் அஸ்லாம்(வயது 27) என்பவர், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக தனது மினிலாரியை நிறுத்திக்கொண்டு வெங்காயம் விற்றுக்கொண்டிருந்தார்.

இதை பார்த்த போலீசார் அங்கு சென்று, வாகனத்துக்குரிய ஆவணங்களை தரும்படி கூறினர். ஆனால் அவரிடம் ஆவணங்கள் இல்லை என தெரிகிறது. இதையடுத்து போலீசார், அந்த மினிலாரியை பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் சிறிதுநேரம் கழித்து போலீஸ் நிலையம் வந்த அஸ்லாம், அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு முருகனிடம், எனது வாகனத்தை ஏன் பறிமுதல் செய்தீர்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை சட்டையை பிடித்து இழுத்து, தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஏட்டு முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அஸ்லாமை கைது செய்தனர்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த அஸ்லாமின் தம்பி சதாம்உசேன்(26), உறவினர் க.மாமானந்தலை சேர்ந்த சையத் முஸ்தபா(38) ஆகியோர் போலீஸ் நிலையம் வந்தனர். பின்னர் அஸ்லாம் மீது எப்படி புகார் கொடுக்கலாம் எனக்கேட்டு, அங்கிருந்த ஏட்டு முருகனை நெட்டித்தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதையடுத்து சதாம்உசேன், சையத் முஸ்தபா ஆகிய 2 பேரையும் அங்கிருந்த போலீசார் கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து ஏட்டு தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story