நாகை சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


நாகை சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 6 Aug 2018 4:00 AM IST (Updated: 6 Aug 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

நாகை சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

நாகப்பட்டினம்,

நாகையில் பிரசித்திபெற்ற சவுந்தரராஜபெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களின் ஒன்றாக இக்கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவிலை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் திருமஞ்சனம், பீங்கான் ரத ஊர்வலம் வருகிற 13-ந்தேதி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் 15-ந்தேதி நடக்கிறது. 

Next Story