தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் சொத்துகள் கையகப்படுத்தப்படுகின்றன வங்கி அதிரடி நடவடிக்கை


தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் சொத்துகள் கையகப்படுத்தப்படுகின்றன வங்கி அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2018 3:45 AM IST (Updated: 6 Aug 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

கரூரை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் சொத்துகளை கையகப்படுத்த வங்கி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கரூர்,

கரூரை சேர்ந்த கே.சி.பழனிசாமி(வயது 83) தி.மு.க.வின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2004-ல் கரூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும், 2011-ல் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். கடந்த 2016-ல் நடந்த அரவக்குறிச்சி சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் மாயனூரில் இவர் நடத்தி வரும் பாலித்தீன் சிமெண்டு பைகள் தயாரிக்கும் நிறுவனம், புதுச்சேரியில் உள்ள காகித ஆலை நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களில் தொழில் சறுக்கலை சந்தித்ததால் சில வங்கிகளில் தனது சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கே.சி.பழனிசாமியின் சொத்துகளை கையகப்படுத்துவதாக கோவை ஸ்டேட் வங்கி நிர்வாகம் கூறி உள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூரை சேர்ந்த கே.சி.பழனிசாமி மற்றும் அவரது உறவினர்களின் சொத்துகளை அடமானம் வைத்து புதுச்சேரியில் செயல்படும் கரூர் கே.சி.பி. பேக்கேஜிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில், ரூ.173 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 571 வங்கிகளில் கடன் பெறப்பட்டுள்ளது. பின்னர் அதனை முறையாக திருப்பி செலுத்த தவறிய காரணத்தினால் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி நோட்டீஸ் விடப்பட்டு, அதிலிருந்து 60 நாட்களுக்குள் கடனை திருப்பி செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குறித்த நேரத்தில் மேற்கொண்ட தொகையை செலுத்த தவறியதால், கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ. ஆகிய வங்கிகளின் ஒப்புதலுடன், கூட்டமைப்பின் தலைமையேற்ற வங்கி என்ற அடிப்படையில், கடன்தாரரின் உத்தரவாதம் அளித்த சொத்துகள் கையகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story