ஒரகடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது


ஒரகடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 6 Aug 2018 3:15 AM IST (Updated: 6 Aug 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

ஒரகடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

படப்பை, 


காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் சுற்றுவட்டார பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை மற்றும் செல்போன்களை சிலர் பறித்து செல்வதாக ஒரகடம் போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன.

இதனையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் அதிமானி உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மேற்பார்வையில் ஒரகடம் இன்ஸ்பெக்டர் திருவள்ளுவர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

நேற்று காலை ஒரகடம் அடுத்த பணப்பாக்கம் சாலை சந்திப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்றது.

உடனே போலீசார் பின்னால் துரத்திச்சென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அதனை ஓட்டிச்சென்ற 2 வாலிபர்களையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

தொடர்ந்து விசாரித்ததில், பிடிபட்டவர்கள் சென்னை வண்டலூர் புதுஓட்டேரி அறிஞர் அண்ணா காலனி காமராஜர் தெருவை சேர்ந்த மணிவண்ணன் (வயது 26), கொளப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த நவீன் (22) என்பதும், இருவரும் தனியாக நடந்து செல்லும் பொதுமக்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்று கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை மற்றும் செல்போன்களை பறித்து சென்றதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வழிப்பறியில் ஈடுபட்டதாக பெருங்களத்தூர் சதானந்தபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்த விஜயகுமார் (23), ஓட்டேரி விரிவுப்பகுதி நேரு தெருவை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். இவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களும், 2 கத்தி, ஒரு செல்போன் மற்றும் அரை பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணன், நவீன், விஜயகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழிப்பறி கொள்ளையர்களை உடனடியாக பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் அதிமானி வெகுமதி வழங்கி பாராட்டினார். 

Next Story