மாவட்ட செய்திகள்

சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் + "||" + The danger of an accident by trucks parked on the road

சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
தூத்துக்குடியில் சரக்கு வாகனம் நிறுத்தும் முனையத்தை புறக்கணித்து, சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
தூத்துக்குடி, 


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான லாரிகள் வருகின்றன. இந்த லாரிகள் துறைமுகத்துக்கு செல்வதற்கு தாமதம் ஆனாலோ, சரக்குகள் ஏற்றுவதற்கு தாமதம் ஆனாலோ பெரும்பாலும் தூத்துக்குடி -மதுரை பைபாஸ் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்திய உணவுக்கழக குடோன் அருகே ரவுண்டானாவில் உள்ள அணுகு சாலையிலும் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக் கப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகம் சார்பில், ரூ.23 கோடியே 69 லட்சம் செலவில் மீன்வளக் கல்லூரி எதிரே சரக்கு வாகனங்கள் நிறுத்தும் முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த முனையத்தில் லாரி டிரைவர்கள், கிளனர்கள் தங்கும் வசதி, குளியல் மற்றும் கழிப்பறை வசதி, சிற்றுண்டி வசதி உள்ளது. இங்கு ஒரு மணி நேரத்துக்கு சரக்கு வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம். அடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தங்கும் வசதி கட்டணமாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இங்கு ஒரே நேரத்தில் 125 சரக்கு வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது. இந்த முனையத்தில் துறைமுக நுழைவுச்சீட்டு பெறுவதற்கான வசதியும் தொடங்கப்பட்டு உள்ளது.

இத்தகைய வசதிகள் இருந்தாலும், சரக்கு வாகனங்கள் நிறுத்தும் முனையம் வெறிச்சோடியே காட்சி அளிக்கிறது. வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கான இடம் உருவாக்கப்பட்டாலும், அதனை பயன்படுத்தாமல், லாரிகள் வழக்கம்போல் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே லாரிகளை சரக்கு வாகனங்கள் நிறுத்தும் முனையத்திலோ, அல்லது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் லாரி ஷெட்டுகளிலேயோ நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.