காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா
x
தினத்தந்தி 5 Aug 2018 9:45 PM GMT (Updated: 6 Aug 2018 12:25 AM GMT)

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.

செங்கல்பட்டு, 

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கபெருமாள்கோவில் ரெயில் நிலைய சாலையில் பழமை வாய்ந்த சிங்கை சிங்காரவேலன் என்னும் முருகன் கோவில் உள்ளது.

அங்கு ஆடி கிருத்திகையையொட்டி நேற்று குளக்கரையில் இருந்து பால்குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக வந்த பக்தர்கள் சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

இதனையடுத்து பக்தர்கள் தங்களுக்கு மிளகாய்பொடியால் அபிஷேகம் செய்தும், உடலில் வேல் குத்தியும் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர். 5 ஆயிரம் பேருக்கு அன்புச்செல்வி கடை உரிமையாளர்கள் பீரோ அன்பழகன், நரசிம்மன் அன்னதானம் வழங்கினர்.

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு பரணி அபிஷேகம் நடந்தது. இதில் மூலவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 4 மணிக்கு தங்ககிரீடம், தங்க வேல் அணிவிக்கப்பட்டு, சந்தன காப்பு செய்யப்பட்டது. நேற்று காலை முதல் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகபெருமானை தரிசித்தனர். பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வந்து முருக பெருமானை தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தியவாறு கோவிலுக்கு வந்தனர்.

பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு காவடியை சுமந்த வண்ணம் கோவிலுக்கு வந்தனர். 


Next Story