துண்டு துண்டாக வெட்டி குளத்தில் உடல் பாகங்கள் வீச்சு: கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் ஆடையை வைத்து போலீசார் விசாரணை


துண்டு துண்டாக வெட்டி குளத்தில் உடல் பாகங்கள் வீச்சு: கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் ஆடையை வைத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Aug 2018 5:30 AM IST (Updated: 7 Aug 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசப்பட்ட பெண்ணின் ஆடையை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியில் செல்வாம்பதி குளத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி இளம்பெண்ணின் உடலின் ஒரு பகுதி தண்ணீரில் மிதந்து வந்தது.

அத்துடன் அதன் அருகே சாக்கு மூட்டைக்குள் கட்டி வீசப்பட்டு மிதந்த பெண்ணின் தலை மற்றும் கைகள் மீட்கப்பட்டன. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலின் பிற பகுதிகளை தேடியதை தொடர்ந்து கடந்த 26-ந் தேதி இடுப்பு பகுதி கிடைத்தது. தொடர்ந்து 31-ந்தேதி அந்த பெண்ணின் 2 கால்களும் குளத்தில் மிதந்தன.இந்த உடல் உறுப்புகளை செல்வபுரம் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கோவை செல்வாம்பதி குளத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண், தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, மூட்டையாக கட்டி எடுத்து வந்து குளத்தில் வீசி சென்று இருக்கிறார்கள்.மீட்கப்பட்ட உடல் மற்றும் தலை அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.அந்த பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கலாம்.

அந்த பெண்ணின் காலில் கிடந்த நிலநிற மெட்டி வடநாட்டு பெண்கள் அணியக்கூடியது. அவர் அணிந்து இருந்த சிவப்பு நிற சுடிதார், வெள்ளையில் சிவப்பு பூ போட்ட சுடிதாரின் கை பகுதியையும் வைத்து விசாரணையை நடத்தி வருகிறோம்.அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற அடையாளம் காண கோவை மற்றும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் காணாமல் போன பெண்களின் பட்டியலை தயாரித்து தேடி வருகிறோம்.

கோவையில் வசிக்கும் வடநாட்டை சேர்ந்தவர்களிடமும் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். தமிழ்நாடு உள்பட வெளி மாநில போலீஸ் நிலையங்களுக்கும் இளம்பெண் யார்? என்பதை கண்டுபிடிக்க விசாரணையில் கிடைத்த தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story