வறண்டு கிடக்கும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை வேண்டி அழகன்குளம் கிராம மக்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை


வறண்டு கிடக்கும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை வேண்டி அழகன்குளம் கிராம மக்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 7 Aug 2018 4:00 AM IST (Updated: 7 Aug 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

வறண்டு கிடக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டி அழகன்குளம் கிராம மக்கள் 3 நாட்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டதால் கால்நடைகளும் தண்ணீர் இல்லாமல் பலியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. விவசாயிகளும் மழை இல்லாத காரணத்தால் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் குடும்பத்துடன் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்ட மக்கள் தண்ணீர் தட்டுப்பாடின்றி வாழவும், விவசாயிகளின் கஷ்டங்கள் தீர்ந்து மாவட்டம் செழிப்பாக மாற வேண்டியும் மண்டபம் யூனியன் அழகன்குளம் கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் 3 நாட்கள் தொடர்ந்து நோன்பிருந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.

முன்னதாக அப்பகுதி மக்கள் மற்றும் தீனியாத் மாணவர்கள் ஐக்கிய முஸ்லிம் ஜமாத் செயலாளர் பக்ருல்அமீன், முஸ்லிம் ஜமாத் தலைவர் லுக்மான், செயலாளர் அகமது பசீர், சங்க தலைவர் சகுபர் சாதிக், செயலாளர் சீமான் உள்ளிட்டோர் தலைமையில் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அழகன்குளம் பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் மழை பெய்ய வேண்டியும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் சிறப்பு தூஆ ஓதினர். அதைதொடர்ந்து அழகன்குளம் கடற்கரை மணல் திட்டில் வெயிலில் நின்றவாறு சிறப்பு தொழுகை நடத்தினர். ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் உமர் பாரூக் தலைமை தாங்கி சிறப்பு தொழுகையை நடத்தினார். அப்போது மழை வேண்டி சொற்பொழிவாற்றினார்.


Related Tags :
Next Story