காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:00 PM GMT (Updated: 6 Aug 2018 7:58 PM GMT)

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடி நகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தனியார் வசம் டெண்டர் கொடுக்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக அந்த தனியார் நிறுவனம் துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் அத்தியாவசிய செலவுகளை செய்ய முடியாமல் அவதியுற்று வந்தனர். இந்தநிலையில் முறையாக ஊதியம் கொடுக்காததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பின்னர் அவர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நகராட்சி அலுவலகத்திற்குள் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊதியம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story