கைதான சுங்கத்துறை அதிகாரி உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்? மேலும் 29 பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை


கைதான சுங்கத்துறை அதிகாரி உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்? மேலும் 29 பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 7 Aug 2018 4:30 AM IST (Updated: 7 Aug 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

கைதான சுங்கத்துறை அதிகாரி உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட உள்ளனர். மேலும் 29 பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,

சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி வந்த பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சில பயணிகள் குருவிகளாக செயல்பட்டு எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்து வியாபாரிகளிடம் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. சுங்கத்துறை அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுக்கொண்டு உரிய சுங்க கட்டணம் வசூலிக்காமல் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று 2-வது கட்ட விசாரணைக்கு பின் சுங்கத்துறை உதவி ஆணையர் உள்பட 6 ஊழியர்களும், 13 பயணிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும் 29 பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை நேற்று இரவும் நீடித்தது. இதனால் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை யினர் குவிக்கப்பட்டனர். பயணிகள் மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தேவையான உணவுகள் வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டன.

சி.பி.ஐ. அதிகாரிகளின் பிடியில் உள்ள 29 பயணிகளும் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தி வருவதில் குருவிகளாக செயல்பட்டிருக்கலாம் என கருதி தொடர்ந்து விசாரிக்கின்றனர். அவர்களது பயண விவரம் உள்ளிட்டவற்றை சேகரித்து துருவி, துருவி விசாரித்து வருகின்றனர். இதில் மேலும் சில பயணிகள் கைதாகலாம் என தெரிகிறது.

இதற்கிடையில் கைதான சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசுலு, கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்பட 6 பேர் மீது துறைரீதியான நடவடிக்கைகளை சுங்கத்துறை உயர் அதிகாரிகள் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. எனவே 6 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

Next Story