மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி


மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 Aug 2018 9:45 PM GMT (Updated: 6 Aug 2018 8:17 PM GMT)

தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது.

தேனி,


தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்த ஒததிகை நிகழ்ச்சி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்களை கொண்டே இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதற்காக விழிப்புணர்வு குழு, அவசர கால எச்சரிக்கை குழு, வெளியேற்றுதல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, முதலுதவி குழு, தீத்தடுப்பு குழு, இட பாதுகாப்புக்குழு, போக்குவரத்து மேலாண்மை குழு, ஊடக மேலாண்மை குழு ஆகிய 9 குழுக்கள் அமைக்கப்பட்டன. அலுவலக வளாகத்தில் தேவையான தீயணைப்பு கருவிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டு ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தின் கீழே உள்ள ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சி நிகழ்த்தி காட்டப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைப்பது? மீட்பு பணிகளை எப்படி மேற்கொள்வது? முதலுதவி எப்படி அளிப்பது? என்பன உள்ளிட்ட செயல் விளக்கங் களை செய்து காண்பித்தனர்.

இதற்காக மாடியில் இருந்து பாதுகாப்பான தரைத்தளம் பகுதிக்கு கயிறுகள் கட்டி ரோப் கார் போன்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மனித பொம்மையை மாடியில் இருந்து கயிறு மூலம் கீழே இறக்கி வந்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

சமீபத்தில் கோவையில் ஒரு கல்லூரியில் இதேபோன்று நிகழ்த்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியின் போது தவறான வழிகாட்டுதலால் மாணவி ஒருவர் பலியானார். எனவே, மனிதர்களுக்கு பதில் பொம்மை பயன்படுத்தப்பட்டது. சுமார் 1 மணி நேரம் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது.

ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் தென்னரசு தலைமையில் தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இந்த ஒத்திகையை செய்து காட்டினர். 

Next Story