விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி சென்னையில், 16-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி


விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி சென்னையில், 16-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 7 Aug 2018 4:15 AM IST (Updated: 7 Aug 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி வருகிற 16-ந் தேதி சென்னையில் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:-

இந்த ஆண்டு காவிரியின் உபரி நீர் மூலம் மேட்டூர் அணை நிரம்பியதால் உடன் திறக்கப்பட்டு சுமார் 15 டி.எம்.சி. தண்ணீர், கடலில் கலந்துள்ளது. தூர் வாரும் பணி மற்றும் பராமரிப்பு பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளில் முறைகேடுகள் செய்ததன் விளைவு இது. பாசன கிளை ஆறுகள் பராமரிப்பின்றி அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான தண்ணீர் விடுவிக்கப்பட்டும் வாய்க்கால்கள் மூலம் பாசனப் பகுதிகளில் ஏரி, குளம், குட்டைகளை நிரப்புவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை திறக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்களுக்குள் கடைமடைக்கு தண்ணீர் செல்வது வாடிக்கை, ஆனால் இவ்வாண்டு ஜூலை 19-ல் திறக்கப்பட்ட தண்ணீர் 15 நாட்கள் கழித்து பெரும் போராட்டத்திற்கிடையே தற்போதுதான் கடைமடைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வனத்துறை போன்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட நீர்ப்பாசனத்துறையை உடனடியாக உருவாக்கிடவும், முறைகேடின்றி வெளிப்படை தன்மையோடு தூர்வாருவது, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை வருகிற 16-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடத்த உள்ளோம். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தஞ்சை மணி, நாகை ராமதாஸ், திருவாரூர் செந்தில்குமார், மாவட்ட தலைவர்கள் தஞ்சை துரைபாஸ்கரன், நாகை பாலசுப்பிரமணியன், திருவாரூர் சுப்பையன், மன்னார்குடி நகர தலைவர் தங்கமணி, திருமருகல் ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் மதியழகன், ஒரத்தநாடு மகேஸ்வரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story