சத்தியமங்கலம் அருகே குடிநீர் வினியோகிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சத்தியமங்கலம் அருகே குடிநீர் வினியோகிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் கொமராயனூர் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திராநகர், வி.என்.எஸ்.நகர். இந்த பகுதி மக்களுக்கு பவானி ஆற்று நீர் மேல்நிலை தொட்டிக்கு ஏற்றப்பட்டு, பின்னர் குழாய் வழியாக வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக தண்ணீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் இந்திரா நகர், வி.என்.எஸ். நகர் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் நேற்று காலை ஒன்று திரண்டு சத்தியமங்கலம்–அத்தாணி மெயின் ரோட்டில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், சத்தியமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், ‘8 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விடுகிறார்கள். நாங்கள் அடிப்படை தேவைக்கு கூட தண்ணீர் இன்றி அவதிப்படுகிறோம். வட்டார வளர்ச்சி அதிகாரி இங்கு வந்து, ஒரு முடிவு சொன்னால்தான் கலைந்து செல்வோம்‘ என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி மூர்த்தி அங்கு வரவழைக்கப்பட்டார்.
பின்னர் அவர் பொதுமக்களிடம், ‘அத்தாணியில் இருந்து வி.என்.எஸ்.நகர் வழியாக இந்திரா நகர் வரை ரோடு போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக குழி தோண்டியபோது பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்துவிட்டன. இன்னும் 4 நாட்களில் அனைத்து குழாய்களும் சரிசெய்யப்பட்டுவிடும். அதன்பின்னர் முறையாக தண்ணீர் வினியோகிக்கப்படும். அதுவரை லாரி மூலம் தண்ணீர் கொண்டுவந்து வினியோகிக்க நடவடிக்கை எடுக்கிறோம்‘ என்றார். அதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.