மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை தினத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை தினத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2018 4:15 AM IST (Updated: 7 Aug 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை தினத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ரோகிணியை, சேலம் மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஒரு மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் விடப்பட்ட உள்ளூர் விடுமுறையில் அரசு பள்ளிகளை தவிர, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டோம்.

அதேபோல், இந்த ஆண்டு சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நாளை (புதன்கிழமை) மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா? என்று தனியார் பள்ளிகளை கண்காணிக்க வேண்டும். விடுமுறை தினத்தில் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் செல்வதால் நமது பண்பாடு, கலாசாரம், பக்தி ஆகியவை பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. எனவே, உள்ளூர் விடுமுறைதினத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறுகையில், சேலம் கோட்டை மாரியம்மன் கோ வில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது இல்லை என்று மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. எனவே, கல்வித்துறை அதிகாரிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். உள்ளூர் விடுமுறை தினத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது, என்றார். 

Next Story