மாவட்ட செய்திகள்

தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குறைந்து வரும் பரப்பலாறு அணை நீர்மட்டம் + "||" + The water level of the transmitting water level in the southwest monsoon lashes

தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குறைந்து வரும் பரப்பலாறு அணை நீர்மட்டம்

தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குறைந்து வரும் பரப்பலாறு அணை நீர்மட்டம்
வடகாடு மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் பரப்பலாறு அணையின் நீர்மட்டம் கிடு, கிடுவென குறைந்து வருகிறது.
சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். அணையில் 197.95 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது அணையில் 62 அடி தண்ணீர் உள்ளது. 38 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

சத்திரப்பட்டி, விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 3 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அணை மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகியவை பயன்பெறுகின்றன.

பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 34 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. இந்தாண்டு போதிய அளவு தென்மேற்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள 6 குளங்களும் நிரம்பாமல் உள்ளது.

இதனால் அனைத்து தரப்பு மக்களும் கவலையடைந்துள்ளனர். இந்த பகுதியில் ஒரு சில ஊர்களை தவிர பிற ஊர்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்க தொடங்கியுள்ளது. பரப்பலாறு அணை தூர்வாரப்படாமல் உள்ளதால், வண்டல் மண் மற்றும் கழிவுகள் சுமார் 30 அடி உயரம் வரை உள்ளது.

எனவே வருகிற அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.