மாவட்ட செய்திகள்

ஊரணிபுரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் 3 பேர் கைது + "||" + Three persons were arrested for allegedly raiding bunkers in Ooranakottai

ஊரணிபுரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் 3 பேர் கைது

ஊரணிபுரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் 3 பேர் கைது
ஊரணிபுரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மதுக்கடைகளை மூட கிராம மக்கள் வலியுறுத்த இருந்த நிலையில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேலஊரணிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட 2 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது கிராம மக்கள் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாக காவாலிப்பட்டி சரக வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார் திருவோணம் போலீசில் புகார் அளித்தார்.


அதன்பேரில் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க செயலாளர் சின்னத்துரை உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலஊரணிபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ்(வயது58), வெட்டுவாக்கோட்டையை சேர்ந்த சந்திரசேகர் (55), கீழஊரணிபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (30) ஆகிய 3 விவசாயிகளை நேற்றுமுன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று நேரில் சந்தித்து மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்த உள்ளதாக விவசாயிகள் நலச்சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் அறிவித்து இருந்தனர். நேற்றுமுன்தினம் இரவு கிராம மக்கள் சென்னைக்கு வாகனங்களில் புறப்பட தயாராக இருந்தனர். இவர்களுடன் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜும் சென்னை செல்ல இருந்தார். இந்த நிலையில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் தொடர்புடைய திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க செயலாளர் சின்னத்துரை உள்பட 22 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.