உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகம் முற்றுகை, பெண்கள் போராட்டம்


உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகம் முற்றுகை, பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2018 11:45 PM GMT (Updated: 6 Aug 2018 11:30 PM GMT)

உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தை அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை அரசின் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை போலியாக சான்றிதழ் பெற்றவர்களுக்கும் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் சந்தேகத்துக்குரியவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்குவது கடந்த 2 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சட்டசபையிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அமைச்சர் கந்தசாமி பதில் அளிக்கும்போது, உதவித்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அமைச்சர் அறிவிப்பின்படி யாருக்கும் வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து உப்பளம் தொகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அலுவலக வாசலில் அமர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அலுவலகத்துக்குள் யாராலும் செல்லவும் முடியவில்லை. உள்ளே இருந்தவர்களால் வெளியே வரவும் முடியவில்லை. இதற்கிடையே பெண்களில் சிலர் இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் பெண்களுடன் இயக்குனர் யஷ்வந்தையா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கவர்னரின உத்தரவு தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி செல்போன் மூலம் அன்பழகன் எம்.எல்.ஏ.வை தொடர்புகொண்டு பேசினார். அப்போது நிறுத்தப்பட்ட அனைவருக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவரது உறுதிமொழியை ஏற்று அன்பழகன் எம்.எல்.ஏ.வும், பெண்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் தொடர்பாக அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த 15 வருடங்களாக நிதியுதவி பெற்று வந்த விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற அப்பாவி ஏழை பெண்களின் உதவித்தொகையை விசாரணை என்ற பெயரில் கடந்த 2 மாதமாக அரசு நிறுத்தி உள்ளது. ஏற்கனவே வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் தீர ஆய்வு செய்து வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை துறையின் இயக்குனர் மனிதாபிமானமற்ற முறையில் தன்னிச்சையாக நிறுத்தி உள்ளார்.

இதுசம்பந்தமாக கேட்கும்போது கவர்னர், நிதித்துறை செயலாளரின் உத்தரவின்பேரில் நிறுத்தியதாக கூறுகிறார். மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனை வழங்க கவர்னர், முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story