வேர்க்கடலை பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


வேர்க்கடலை பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Aug 2018 11:53 PM GMT (Updated: 6 Aug 2018 11:53 PM GMT)

மழை இல்லாததால் பயிரிடப்பட்ட வேர்க்கடலை பட்டுபோனது. அதனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

வேலூர், 


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, பட்டா மாற்றுதல், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு வகையான 447 மனுக்கள் பெறப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள 80 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். எங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர் புரிசை பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து கொண்டு வரப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.

புரிசை அருகே உள்ள 6 ஏக்கர் நிலத்தில் 3 அடி ஆழம் மண் எடுப்பதற்கு அனுமதிபெற்று, முறைகேடாக 30 அடிக்கும் மேலாக மண் எடுத்து வருகிறார். அதனால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட உள்ளது. எனவே முறைகேடாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

காட்பாடி தாலுகா காளாம்பட்டு அருகே உள்ள மேல் அச்சுக்கட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் நீர்நிரம்பி காணப்படும் குளத்தின் ஒருபகுதியை நிரப்பி, அங்கு துணை மின்நிலையம் அமைக்க பணிகள் நடக்கிறது. துணை மின்நிலையம் அமைய உள்ள இடத்தின் அருகே ஆரம்பப்பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. துணை மின்நிலையத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால், அதனால் பள்ளி மாணவர்கள், குடியிருப்பில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே துணை மின்நிலையம் வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் அளித்த மனுவில், வேலூர் மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவில் விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். ஆனால், மழை இல்லாததால் வேர்க்கடலை பட்டுபோய் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஒரு குழு அமைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வேர்க்கடலை பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மற்றொரு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாதத்திற்கு 8 நாள் என வரைமுறை வகுத்து செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தால் ஆடிமாதத்தில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே ஆடி மாதத்தில் 100 நாட்கள் வேலை கொடுப்பதை தவிர்த்து, சித்திரை மாதங்களில் பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில், மின்சாரம் தாக்கி, மின்னல் தாக்கி மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியில் இருந்து ரூ.17½ லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் ராமன் வழங்கினார்.

இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், தனித்துணை கலெக்டர் பேபி இந்திரா (சமூக பாதுகாப்பு), மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கலெக்டர் அலுவலக மேலாளர் முரளி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story