மாவட்ட செய்திகள்

சேலத்தில் விவசாயிகள் மனிதசங்கிலி போராட்டம் - 63 பேர் கைது + "||" + 63 peasants arrested for human chain struggle in Salem

சேலத்தில் விவசாயிகள் மனிதசங்கிலி போராட்டம் - 63 பேர் கைது

சேலத்தில் விவசாயிகள் மனிதசங்கிலி போராட்டம் - 63 பேர் கைது
8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 63 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான நில அளவீடு செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் நில அளவீடு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட குழு சார்பில் நேற்று மாலை சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு சங்க மாநில துணைச்செயலாளர் இந்திரஜித் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், எனவே அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 63 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் மாநகராட்சி சாலை முன்பு சிறிது நேரம் போக்கு வரத்து பாதிப்படைந்தது.