மாவட்ட செய்திகள்

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு: குமரி மாவட்டத்தில் வாடகை கார்கள் ஓடவில்லை + "||" + Opposition to the federal government's motor vehicle legislation: Rental cars did not run in Kumari district

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு: குமரி மாவட்டத்தில் வாடகை கார்கள் ஓடவில்லை

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு: குமரி மாவட்டத்தில் வாடகை கார்கள் ஓடவில்லை
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான வாடகை கார்கள் ஓடவில்லை.
நாகர்கோவில்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக வாடகை கார் ஓட்டுனர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.


இந்த நிலையில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்துக்கு எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. திட்டமிட்டபடி நேற்று குமரி மாவட்டத்தில் மோட்டார் வாகன தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாடகை கார்கள், ஆட்டோக்கள் மற்றும் சிறிய சரக்கு வாகனங்கள் ஓடவில்லை. இதேபோல நாகர்கோவிலில் தொழிற்சங்கங்களை சேர்ந்த சில ஆட்டோக்களும், வாடகை கார்களும் இயங்கவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற வாடகை கார்கள் அந்தந்த நிறுத்தங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக கோட்டார் ரெயில் நிலையம், வடசேரி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வாடகை கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன.

மேலும் செட்டிகுளம் பகுதியில் சில மோட்டார் வாகனங்கள் பழுது நீக்கும் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு வாடகை வேன்கள் மற்றும் டாக்சிகள் தினமும் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று இந்த வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதோடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகளும் நேற்று ஒருநாள் மட்டும் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதையொட்டி மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகனன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். அதோடு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

இந்த போராட்டம் காரணமாக ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் மற்றும் முக்கிய சந்திப்புகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.