குட்கா வழக்கில் தேடப்பட்டு வந்த தொழிற்சாலை அதிபர் சூலூர் கோர்ட்டில் சரண்
குட்கா வழக்கில் தேடப்பட்டு வந்த தொழிற்சாலை அதிபர் சூலூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
சூலூர்,
கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா தொழிற்சாலை கடந்த ஏப்ரல் மாதம் சூலூர் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை டெல்லியை சேர்ந்த அமித் ஜெயின் என்பவர் நடத்தி வந்தார். இங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போதை பாக்குகள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன் எடையுள்ள மூலப்பொருட்கள் மற்றும் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 79 மூட்டை குட்காவை போலீசார் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிற்சாலை மேலாளர் ரகுராமன் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்தி, சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் மற்றும் சூலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நா.கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 10 பேர் மீது சூலூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் குட்கா தொழிற்சாலை தொடர்பாக கண்ணம்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் தளபதி முருகேசன் உள்பட 7 பேரை சூலூர் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். போராட்டம் தொடர்பாக நா.கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 3 பேரை சூலூர் போலீசார் தேடி வந்தனர். பின்னர் அவர்கள் சூலூர் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றனர். பின்னர் சூலூர் கோர்ட்டில் ஆஜராகி நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.
இதேபோல் தளபதி முருகேசன் உள்பட மற்ற 7 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சூலூர் போலீசாரின் தொடர் விசாரணையில், தளபதி முருகேசன் மட்டும் குட்கா வழக்கில் 6–வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் ஆலை உரிமையாளர் அமித் ஜெயின் மட்டும் போலீசாரின் பிடியில் சிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை சூலூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி வேடியப்பன் முன்னிலையில் அமித் ஜெயின் சரண் அடைந்தார். அமித் ஜெயினுக்கு 15 நாட்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு கையெழுத்து போட வேண்டும் என்று அமித் ஜெயினுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.