கருணாநிதி மரணம் ஊட்டியில் தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து கண்ணீர் அஞ்சலி


கருணாநிதி மரணம் ஊட்டியில் தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து கண்ணீர் அஞ்சலி
x
தினத்தந்தி 7 Aug 2018 10:30 PM GMT (Updated: 7 Aug 2018 9:19 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து கருணாநிதியின் உருவப்படத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

ஊட்டி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கருணாநிதி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. கொடி இறக்கப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அலுவலகம் முன்பு கருணாநிதிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம் என்று பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

தி.மு.க.வினர் கட்சி அலுவலகத்தில் இருந்து கமர்சியல் சாலை வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது கட்சி தொண்டர்கள் கருணாநிதி உருவப்படம் இடம்பெற்ற பெரிய பேனரை கையில் ஏந்தி வந்தனர். பின்னர் காபிஹவுஸ் பகுதியில் பேனர் வைக்கப்பட்டு தி.மு.க. தொண்டர்கள் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அந்த சமயத்தில் சில தொண்டர்கள் கருணாநிதி இறந்த துக்கம் தாளாமல் பேனரை பிடித்த படி கதறி அழுதனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து ஊட்டியில் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், லோயர் பஜார், மெயின் பஜார், குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், தொரப்பள்ளி, நடுவட்டம், மரப்பாலம், நாடுகாணி, தேவாலா, பந்தலூர், சேரம்பாடி, கொளப்பள்ளி, எருமாடு உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

ஊட்டியில் உள்ள ஒரு கடைக்கு முன்பு முத்தமிழ் இயற்கை எய்தியது என்று நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்தது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் மூடப்பட்டன. மாலை 6 மணியளவில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.

ஊட்டியில் இருந்து கிராமப்பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் பயணிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த பஸ்கள் பயணிகளை இறக்கி விட்டு போக்குவரத்து பணிமனைகளுக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் ஊட்டி மத்திய பஸ் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோல் கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோல் பல்வேறு இடங்களுக்கு சென்று இருந்த பஸ்கள் உடனடியாக கூடலூர் போக்குவரத்து பணிமனைக்கு வரவழைக்கப்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஊட்டி மத்திய பஸ் நிலையம், காபிஹவுஸ், ராஜீவ்காந்தி ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி மேற்பார்வையில் ஊட்டியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story