மாவட்ட செய்திகள்

கொதிகலன் வெடித்ததால் போராட்டம்: கோவிலூர் ரசாயன ஆலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஆய்வு + "||" + Struggle for boiling out: Chemical plant Explore pollution control officer

கொதிகலன் வெடித்ததால் போராட்டம்: கோவிலூர் ரசாயன ஆலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஆய்வு

கொதிகலன் வெடித்ததால் போராட்டம்: கோவிலூர் ரசாயன ஆலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஆய்வு
காரைக்குடியை அடுத்த கோவிலூரில் கொதிகலன் வெடித்த ரசாயன ஆலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஆய்வுசெய்தார்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே கோவிலூரில் தனியாருக்கு சொந்தமான துணிகளுக்கு சாயம் தயாரிக்கும் ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட வாயு காற்றில் பரவி அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆலையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலையில் உள்ள கெமிக்கல் பவுடர் சேமித்து வைக்கப்படும் கொதிகலன் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பயங்கர சத்தம் கேட்டதால் கோவிலூர் பகுதியில் வசிப்போர் அதிர்ச்சியடைந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர். மேலும் ரசாயன ஆலை கொதிகலன் வெடித்ததால் அதில் இருந்து ஒருவித வாயு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கோவிலூர் பகுதி மக்கள் ரசாயன ஆலையில் இருந்து வெளியேறிய கெமிக்கல் பவுடர் காற்றில் கலந்து நச்சுத்தன்மை ஏற்படுத்தியதாக புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை போராட்டம் நீடித்தது.

போராட்டத்தை தொடர்ந்து நேற்று காலை மாசு கட்டுப்பாட்டு அதிகாரி தங்கரதி, ரசாயன ஆலையில் ஆய்வு செய்தார். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அழகப்பன், திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், அ.தி.மு.க. சார்பில் வளர்மதி மற்றும் அப்பகுதியை பொதுமக்கள் சேர்ந்து ஆலையை மூடக்கோரி வலியுறுத்தி, வாக்குவாதம் செய்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. தொடர்ந்து வருகிற 11–ந்தேதி ஆலை தொடர்பாக சப்–கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.