அம்மன் சிலை கடத்தல் வழக்கில் 4 பேர் கைது ரூ.50 லட்சத்துக்கு விலை பேசியதாக பரபரப்பு தகவல்


அம்மன் சிலை கடத்தல் வழக்கில் 4 பேர் கைது ரூ.50 லட்சத்துக்கு விலை பேசியதாக பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 8 Aug 2018 5:04 AM IST (Updated: 8 Aug 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

அம்மன் சிலையை கடத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ரூ.50 லட்சத்துக்கு சிலையை விலை பேசியதாக பரபரப்பு தகவல் வெளியானது.

சென்னை,

சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள காரப்பாக்கம் பகுதிக்கு அம்மன் சிலையை சிலர் காரில் கடத்தி வருவதாக திருச்சி மத்திய சிறையில் இருக்கும் கைதி மூலமாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடனே ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தனது காரில் சென்றால் குற்றவாளிகள் தப்பி சென்று விடுவார்கள் என்று 3 ஆட்டோக்களில் தனிப்படை போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.

நேற்று முன்தினம் மாலையில் சந்தேகப்படும்படி நானோ கார் அந்த வழியாக வந்தது. உடனே ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், போலீசாருடன் ஆட்டோவில் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தார். காருக்குள் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் 2 அடி உயரம் உள்ள அம்மன் சிலை தாலிச்சங்கிலியுடன் இருந்தது. அந்த சிலை மீட்கப்பட்டது. சிலையை கடத்திவர பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

எந்த கோவிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டது என்பது குறித்து பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. திருவள்ளூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து அந்த அம்மன் சிலை திருடப்பட்டது கண்டறியப்பட்டது.

20 கிலோ எடையுள்ள அந்த அம்மன் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டதாகும். அந்த சிலையை போரூர் பகுதியில் ஒருவரிடம் ரூ.50 லட்சத்துக்கு விலை பேசி விற்பதற்காக எடுத்து வந்த பரபரப்பு தகவல் தெரியவந்தது.

இதையடுத்து சிலையை கடத்தி வந்த போரூர் காரப்பாக்கத்தை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி சக்திவேல் (வயது 22), பொத்தேரியை சேர்ந்த யுகநாதன் (42), சோழிங்கநல்லூரை சேர்ந்த பட்டதாரி கோபிநாத் (33), காரப்பாக்கத்தை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயர் கணேஷ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் யுகநாதன் பூட்டுகளை உடைப்பதில் கைதேர்ந்தவர் ஆவார்.

இவர்கள் 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும், கைதானவர்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து சேகரித்து வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Next Story