போக்குவரத்து தொழிலாளர்கள், வேன் டிரைவர்கள் வேலைநிறுத்தம்
மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதை எதிர்த்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள், வேன் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
மத்திய அரசு, மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்ததோடு, புதிய விதிகளையும் சேர்த்துள்ளது. இதனால் விபத்துக்கு டிரைவரே முழு பொறுப்பு எனக்கருதி சிறை தண்டனை விதிக்கப்படும். இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுதிதன்மை சான்று சமர்ப்பிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும் ஒர்க்ஷாப்புகளில் வாகனங்களை பழுது பார்க்க முடியாத நிலை ஏற்படும். எனவே, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்று தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். எனினும், கோரிக்கை ஏற்கபடவில்லை. இதைத் தொடர்ந்து மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் நேற்று சாலை போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் நடந்தது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக தொழிலாளர்கள், தனியார் வேன், கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஓர்க்ஷாப் உரிமையாளர்கள், வாகன உதிரிபாக விற்பனையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் நேற்று சுமார் 20 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதையடுத்து மாற்று டிரைவர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
அதேபோல் தனியார் வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்கள் என 6 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வாகனங் கள் ஓடவில்லை. இதுதவிர மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், ஒர்க்ஷாப் கள், உதிரிபாக விற்பனை கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் செயல்படாததால் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதற்கிடையே திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பு சாலை போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமை தாங்கினார். இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ராஜ்குமார், ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகி முருகேசன், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதே போல் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளதை கண்டித்து பட்டிவீரன்பட்டி, எம்.வாடிப்பட்டி, தேவரப்பன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, சித்தையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் சுமார் 200 ஆட்டோக்கள் ஓடவில்லை.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பழனி பஸ் நிலையம் ரவுண்டானா அருகே மோட்டார் வாகன சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாகன மெக்கானிக் சங்க தலைவர் நிஜாம்முகமது தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் பிச்சைமுத்து, திருப்பூர் மண்டல போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தலைவர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழில் சங்க துணை தலைவர் மணி, ஆட்டோ தொழில் சங்கம் சார்பில் குமரன் ஆகியோர் பேசினார்கள். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story