வேலூரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்,
மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மோட்டார் வாகன சட்டத்தை திருத்த கூடாது, பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் தொழில் சார்ந்த போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டன.
அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு, ஆம்பூர் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தன.
இதில், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், சம்பத், ஆம்பூர் அரசு, பாலகிருஷ்ணன், சுப்பிரமணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரியும், சுங்கச்சாவடி கட்டணத்தை கைவிடக்கோரியும், மோட்டார் வாகன துறைக்கு தனிவாரியம் அமைக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதேபோல் ராணிப்பேட்டை முத்துக்கடையில் சுற்றுலா வேன், கால் டாக்சி ஓட்டுனர்கள் சங்கத்தினர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story