ராணிப்பேட்டை, ஆம்பூரில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல்


ராணிப்பேட்டை, ஆம்பூரில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Aug 2018 12:22 AM GMT (Updated: 8 Aug 2018 12:22 AM GMT)

ராணிப்பேட்டை, ஆம்பூரில் தி.மு.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 


தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரை அடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தி.மு.க.வினர் இடம் கேட்டிருந்தனர். ஆனால் தமிழக அரசு மெரினாவில் அடக்கம் செய்ய சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி காமராஜர் நினைவிடம், ராஜாஜி நினைவிடம் ஆகிய இடங்களில் இடம் அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதையடுத்து அண்ணா சமாதி அருகே இடம் தராத தமிழக அரசை கண்டித்து நேற்றிரவு ராணிப்பேட்டை முத்துக்கடையில் தி.மு.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் குட்டி என்ற கிருஷ்ணமூர்த்தி, ராணிப்பேட்டை நகர செயலாளர் பிஞ்சி பிரகாஷ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் எழில்வாணன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷம் போட்டனர். இதனால் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் ஆம்பூர் நகரில் தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பஸ்நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு லாரியின் கண்ணாடி உடைக்கப்பட்டது. போலீசார் தி.மு.க. வினரை சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு கூறியதை தொடர்ந்து தி.மு.க. வினர் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். 

Next Story