மாவட்ட செய்திகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அரசியல் கட்சியினர், வியாபாரிகள் அஞ்சலி + "||" + DMK Leader of the party Karunanidhi, politicians and traders paid homage

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அரசியல் கட்சியினர், வியாபாரிகள் அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அரசியல் கட்சியினர், வியாபாரிகள் அஞ்சலி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஊட்டி, 


தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடந்தன. ஊட்டி நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஊட்டி கேஷினோ சந்திப்பு பகுதியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர துணை செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க. தொண்டர்கள் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அவர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதில் தி.மு.க. நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் ஊட்டி நகர தலைவர் கெம்பையா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ரபிக் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஊட்டி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஊட்டி ஐந்து லாந்தர் பகுதியில் நடந்தது. இதற்கு சங்க செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த சுகாதார பணியாளர்கள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கருணாநிதி உருவப்படம் இடம்பெற்ற பேனருக்கு மாலை அணிவித்து, மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஊட்டி நகர வியாபாரிகள் சங்கம் சார்பில், கருணாநிதி உருவப்படத்துக்கு ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வியாபாரிகள் மவுன அஞ்சலி செலுத்தி விட்டு, கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தி.மு.க. போக்குவரத்து தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்ட மற்றும் ஊட்டி நகர தி.மு.க. சார்பில், ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., ராஜீவ்காந்தி ரவுண்டானா, நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்த கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி என்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஓய்வறியாத உதயசூரியன் உறங்குகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஊட்டி அப்பர்பஜார் பகுதியில் பொதுமக்கள் கருணாநிதி உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஊட்டியில் திடீரென பெய்த சாரல் மழையில் அவரது உருவப்படம் நனைந்து விடாமல் இருக்க பொதுமக்கள் குடையை வைத்து இருந்தனர். இது மறைந்த உதயசூரியன் மழையில் நனையாமல் உறங்கட்டும் என்பதை நினைவுபடுத்தியது.

கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து தொடங்கிய அமைதி பேரணி ஜான்சன் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், பஸ் நிலையம் வழியாக மார்க்கெட் திடலை வந்தடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருணாநிதியின் சிறப்புகளையும் அவரது சாதனைகளையும் நினைவு கூர்ந்தனர். அமைதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காமராஜர் நகரில் 20-க்கும் மேற்பட்டோர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் கட்டபெட்டு, ஒரசோலை, கீழ்கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மஞ்சூர், எடக்காடு, இத்தலார், கைக்காட்டி, தேவர்சோலை, மு.பாலாடா, பிக்கட்டி, பெங்கால் மட்டம், மஞ்சக்கம்பை, கோத்தகண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அலங்கரிக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காலை 11.30 மணியளவில் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு காந்தி மைதானத்தில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பாதகண்டி, எடக்காடு காந்தி மைதானம், குந்தா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வழியாக முக்கிமலை சென்று மீண்டும் காந்தி மைதானத்தை வந்தடைந்தது. இதனைதொடர்ந்து அனைத்து கட்சி சார்பில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூடலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் நாடுகாணி, பந்தலூர் பகுதியில் கருணாநிதி உருவ படங்களுக்கு தி.மு.க.வினர் உள்பட பொதுமக்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கருப்பு பட்டை அணிந்தவாறு சோகத்துடன் காணப்பட்டனர். இதனிடையே வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் கூடலூர் வழியாக வந்தனர். இதைக்கண்ட தி.மு.க.வினர் வாகன ஓட்டிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை அமைதிபடுத்தி சுற்றுலா பயணிகளின் வாகனங்களை பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தினர். பிற்பகல் 2.30 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.

மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் ராஜகோபாலபுரம் தொடங்கி பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. ஊர்வலத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கட்சிக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தது. மேலும் அலுவலகத்தின் மேல்பகுதியில் கருப்புக்கொடி பறந்து கொண்டு இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், வியாபாரிகள், சுகாதார பணியாளர்கள் கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.