கருணாநிதி தாயார் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை


கருணாநிதி தாயார் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2018 4:15 AM IST (Updated: 9 Aug 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி மரணமடைந்ததை தொடர்ந்து காட்டூரில் உள்ள அவரது தாயார் நினைவிடத்தில் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் தாயார் நினைவிடம் அருகே கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் காட்டூரில், கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடம் உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணமடைந்ததையொட்டி கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான இடங்களான திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள காட்டூர் மற்றும் குளிக்கரை பகுதி சோகத்தில் மூழ்கியது.

தாயார் மீது நீங்காத அன்பு கொண்ட கருணாநிதி, திருவாரூருக்கு வரும்போது காட்டூரில் உள்ள தனது தாயார் நினைவிடத்துக்கு தவறாமல் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். கருணாநிதி மறைவையொட்டி காட்டூரில் உள்ள அவரது தாயார் நினைவிடம் அருகில் திரண்ட மக்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக கருணாநிதி படத்தை திரளான பொதுமக்கள் காட்டூரில் உள்ள அவரது தாயார் நினைவிடத்துக்கு ஊர்வலமாக கொண்டு வந்து தாயார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் நினைவிடம் அருகே கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதேபால குளிக்கரையிலும் தி.மு.க.வினர் கருணாநிதி படத்தை ஊர்வலமாக எடுத்து சென்று அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி மறைவையொட்டி கொரடாச்சேரி ஒன்றியம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 

Next Story