பாபநாசத்தில் தீ விபத்து: 12 கூரை வீடுகள் எரிந்து நாசம்; ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்


பாபநாசத்தில் தீ விபத்து: 12 கூரை வீடுகள் எரிந்து நாசம்; ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 8 Aug 2018 11:00 PM GMT (Updated: 8 Aug 2018 8:51 PM GMT)

பாபநாசத்தில் தீ விபத்தில் 12 கூரை வீடுகள் எரிந்து நாசமாயின. ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. ஒரு வீட்டில் இருந்து வெடித்து சிதறிய செங்கல் தாக்கியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் கீழவங்காரம்பேட்டை முஸ்லிம் தெருவில் ஏராளமான கூரை வீடுகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப்(வயது 70). இவருடைய வீட்டில் நேற்று மதியம் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டு கூரையில் தீப்பிடித்தது.

இந்த தீ மளமளவென அருகே உள்ள பாத்திமா பீவி(50). காதர்மைதீன்(70), ஜாகீர் உசேன்(45), சம்சாத் பேகம்(40), சேக் நூர்தீன்(60), நாசர் அலி(50), மதினா பேகம்(35), அஷ்ரப் அலி(45), சேக் உசேன்(45), லெனின்(65), முகமது சலீம் (61) ஆகிய 11 பேரின் கூரை வீடுகளுக்கும் பரவியது.

இந்த தீ விபத்தில் அப்துல் லத்தீப், பாத்திமா பீவி ஆகியோர் உள்பட 12 பேரின் கூரை வீடுகள் ஒரே நேரத்தில் தீப்பிடித்து எரிந்ததாலும், வீடுகளில் இருந்த 4 கியாஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதாலும் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இதுகுறித்து பாபநாசம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ராமசுப்பிரமணியன், முத்துகுமார், திலகர் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் 3 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதனிடையே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு வீட்டில் இருந்து வெடித்து சிதறிய செங்கல், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாபநாசம் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் என்பவருடைய முதுகில் பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்தில் 12 கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமாயின. அப்பகுதியில் இருந்த 6 தென்னை மரங்கள் எரிந்து நாசமாயின. வீடுகளில் இருந்த மர சாமான்கள், மின்சாதன பொருட்கள் உள்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

தீ விபத்து நடந்த இடத்துக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று நாசமான வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், தஞ்சை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் விஸ்வநாதன், பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், துணை தாசில்தார் செல்வராஜ், பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், பேரூராட்சி செயல் அதிகாரி மணிமொழியன், ஒன்றிய ஆணையர் நாராயணன், பாபநாசம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story