மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து: பலியான 3 மீனவர்களின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் + "||" + The ship collided with a fisherman on the fringe of the crew: The bodies of the three fishermen were buried in their hometown

நடுக்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து: பலியான 3 மீனவர்களின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம்

நடுக்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து: பலியான 3 மீனவர்களின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம்
கொச்சி அருகே நடுக்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் பலியான 3 மீனவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. மேலும் 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கருங்கல்,

கேரள மாநிலம் கொச்சி அருகே முனம்பம் துறைமுகத்தில் தங்கி இருந்து குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி பணிக்கு சென்று வந்தனர். நேற்று முன்தினம் கொச்சி அருகே நடுக்கடலில் ஏசுபாலன் என்பவர் உள்பட 14 பேர் ஒரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் மோதியது. இதில் விசைப்படகு பலத்த சேதம் அடைந்தது.


படகில் இருந்த குமரி மாவட்டம் ராமன்துறை மற்றும் முள்ளூர்துறையைச் சேர்ந்த யோக்கோபு, யுகநாதன், சகாயராஜ் ஆகிய 3 பேர் பலியாயினர். மேலும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 9 மீனவர்கள் மாயமாயினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.

பலியான 3 மீனவர்களின் உடல்களும் கேரள மாநிலம் முனம்பம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உடல்கள் ஏற்றப்பட்டு நேற்று அதிகாலையில் குமரி மாவட்டம் ராமன்துறை மற்றும் முள்ளூர்துறைக்கு கொண்டு வரப்பட்டது.

யாக்கோபு, யுகநாதன் ஆகியோரது உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமன்துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் முன்பு வைக்கப்பட்டது. இதேபோல் முள்ளூர்துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் முன்பு சகாயராஜின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பகல் 11 மணியளவில் அந்த பகுதியில் உள்ள கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டது.

விபத்து குறித்து முனம்பம் துறைமுகத்தில் தங்கி இருந்து மீன்பிடிக்கும் மற்ற மீனவர்கள் கூறுகையில், மீன்பிடிக்க விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்று, அங்கு மீன்கள் இருக்கும் இடங்களை கண்டறிந்த பிறகுதான் வலைகளை வீசுவோம். ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் வரை டிரைவரை தவிர மற்ற மீனவர்கள் அனைவரும் படகில் உள்ள ஓய்வு அறையில் தூங்குவது வழக்கம். அப்படி மீனவர்கள் ஓய்வு அறையில் தூங்கிய போது கப்பல் மோதியதால் மீனவர்கள் படகை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்றனர்.

இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளும், கொச்சி முனம்பம் துறைமுக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் கூறுகையில், விபத்து நடந்த பகுதி கப்பல்களின் வழித்தடம் அல்ல. ஆனாலும் விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியாக 3 இந்திய கப்பல்கள் சென்றுள்ளன. இதில் சென்னையில் இருந்து ஈரான் நோக்கி சென்ற எம்.வி. தேஷ்சக்தி என்ற சரக்கு கப்பல்தான் விசைப்படகு மீது மோதி இருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், கடலில் மூழ்கி மாயமான 9 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் மூலம் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படை படை நீச்சல் வீரர்கள் கடலில் மூழ்கியும் மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே பலியான மீனவர்களின் குடும்பத்தினரை மீன்வளத்துறை அதிகாரி லாமக் ஜெயக்குமார் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.