மாவட்ட செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருணாநிதி உருவ படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி + "||" + Chennai and suburban areas DMK tribute to Karunanidhiimage

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருணாநிதி உருவ படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருணாநிதி உருவ படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருணாநிதி உருவ படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பஸ்கள் ஓடாததாலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவொற்றியூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கருணாநிதியின் உருவ படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் கே.பி.சங்கர் தலைமையில் கே.வி.கே.குப்பம் மீனவ கிராமத்தில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவ படம் வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமானோர் அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருவொற்றியூர் தேரடியில் உள்ள தி.மு.க. அலுவலகம் முன்பு கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன் ஆகியோர் தலைமையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்துக்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

மணலி பகுதியில் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்துக்கு ஏராளமானவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

எண்ணூர் நேருநகர் பகுதியில் தி.மு.க.வினர் மர இழைகள் மற்றும் பூக்களால் கருணாநிதி படத்தை அலங்காரம் செய்து வைத்து இருந்தனர். ஏராளமான பொது மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அன்னை சிவகாமி நகர் மற்றும் திருவொற்றியூர் தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை வில்லிவாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், முகப்பேர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதி முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் முற்றிலும் மூடிக்கிடந்தன. அம்மா உணவகம் மற்றும் சில இடங்களில் மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. ஆனாலும் அங்கு விற்பனை எதுவும் நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் குறைந்து இருந்தது. சாலையோரமும், தெருகளிலும் கருணாநிதி உருவ படத்தை அலங்கரித்து வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு இருந்தது. அனைத்து வீடுகளிலும் பொதுமக்கள் தொலைக்காட்சிகள் முன்பு அமர்ந்து, கருணாநிதிக்கு முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருந்தனர். அரசு விடுமுறை என்பதாலும், பஸ்கள் ஓடாததாலும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, வேளச்சேரி, நங்கநல்லூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளிலும் தி.மு.க.வினர் கருணாநிதி உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், திருநின்றவூர் பகுதிகளில் சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரையிலும், ஓட்டல்கள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. ஆவடி, பட்டாபிராம் பகுதியில் சி.டி.எச். சாலை போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கருணாநிதியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து, தேங்காய், பழம் வைத்து தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். பஸ்கள் ஓடாததால் ஆவடி பணிமனையில் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.

திருவான்மியூர் பஸ்நிலைய சந்திப்பு, மாட வீதிகள், திருவீதி அம்மன் கோவில் தெரு, காமராஜர் சாலை தெற்கு அவென்யூ, அடையாறு எல்.பி. சாலை, திரு.வி.க.பாலம், சாஸ்திரி நகர் முதல் அவென்யூ, பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம், பஸ் நிலையம் சந்திப்பு, மெரினா மீனவர் குடியிருப்பு, மயிலாப்பூர் லஸ்கார்னர் ஆகிய இடங்களில் கருணாநிதியின் உருவ படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் பி.வி.கோவில் தெரு, ராமகிருஷ்ண மடம் சாலை, மந்தைவெளி வெங்கட கிருஷ்ணா சாலை, செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் கோட்டூர்புரம் கெனால் பாங்க் சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் கருணாநிதி உருவ படத்துக்கு மாலை அணிவித்து தேங்காய் உடைத்து, ஊதுவர்த்தி ஏற்றி தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.