தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கடைகள் அடைப்பு
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டது.
திருவள்ளூர்,
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். அவரது இறப்பு குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டீக்கடை, மளிகை கடை, காய்கறிகடை, இனிப்பகம், ஓட்டல்கள் என பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவே திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் கூட்டம் கூட்டமாக வந்து பெட்ரோல் போட நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் போட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை திருவள்ளூர், மணவாளநகர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், திருமழிசை, வெள்ளவேடு போன்ற பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் அதிக வாகன ஓட்டிகள் திரண்டதால் பெட்ரோல் தீர்ந்தது. இதைத்தொடர்ந்து பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் நேற்று மூடப்பட்டது.
அதேபோல திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையான ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, காக்களூர் சாலை, தேரடி பகுதி போன்ற பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. அரசு மற்றும் மாநகர பஸ்களும் தனியார் பஸ்களும் நேற்று முன்தினம் இரவில் இருந்தே இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. திருவள்ளூரில் உள்ள அரசு பணிமனையில் 100–க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருவள்ளூர் பஸ் நிலையம் நேற்று பஸ்கள் மற்றும் பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
காஞ்சீபுரத்தில் அனைத்து ஜவுளி கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள்உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் பஸ் இல்லாததால் பெரும் அவதிப்பட்டனர். பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் எதுவும் இயங்கவில்லை.
காஞ்சீபுரத்தின் மைய பகுதியான பஸ் நிலையம், ரெயில் நிலையம், காந்திரோடு, பூக்கடை சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.