வாகனங்களில் காற்றொலிப்பான்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்


வாகனங்களில் காற்றொலிப்பான்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Aug 2018 4:15 AM IST (Updated: 10 Aug 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

வாகனங்களில் காற்றொலிப்பான்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

குளித்தலை,

அரசு, தனியார் பஸ்கள் மற்றும் லாரிகள் போன்ற கனரக வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவு (டெசிபல்) ஒலியை வெளிப்படுத்தக்கூடிய ஒலிப்பான்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அரசுவிதி உள்ளது. மேலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்களை பஸ், லாரி போன்றவற்றில் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசின் விதிமுறையை மீறி குளித்தலை நகரப்பகுதி வழியாக செல்லும் தனியார் பஸ்கள், லாரிகளில் காற்றொலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வகை காற்றொலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ள பஸ், லாரி போன்ற வாகனங்கள் சாலைகளில் செல்லும்போது முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்வதற்காக இவ்வகை ஒலிப்பான்கள் மூலம் திடீரென அதிக ஒலி எழுப்பும்போது சாலையில் நடந்துசெல்பவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருப்பவர்கள் சில நொடிகள் சற்று பதற்றம் அடைந்துவிடுகின்றனர்.

இதன்காரணமாக சில நேரங்களில் இவர்கள் விபத்துகளில் சிக்கிக்கொள்ளக்கூடிய நிலை உள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள். கோவில்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் அமைந்துள்ள பகுதிகளிலும், நகரப்பகுதி வழியாக செல்லும்போதும் குறிப்பிட்ட டெசிபல் அளவு ஒலி மட்டுமே எழுப்பவேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் இவற்றை பஸ் டிரைவர்கள் கடைபிடிப்பதே இல்லை. குளித்தலை நகரப்பகுதிக்குள் உள்ள சாலை வழியாக செல்லும் பஸ்கள் அதிக ஒலி எழுப்பிக்கொண்டே செல்கின்றன.

இந்த நிலையில் தனியார் பஸ்களில் பயன்படுத்தப்பட்டு வந்த குழாய் வடிவிலான ஒலிப்பான்கள் தற்போது அரசு பஸ்கள் பலவற்றில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அரசின் விதிமுறைகளை மீறி அரசு பஸ்களிலேயே குழாய் வடிவிலான ஒலிப்பான்கள் பொருத்தி பயன்படுத்துவதென்பது வருந்தத்தக்க ஒன்றாகும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் போக்குவரத்துதுறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு அரசால் தடை செய்யப்பட்ட காற்றொலிப்பான்களை அகற்றுவதோடு இதுபொருத்தப்பட்டுள்ள அரசு, தனியார் பஸ் டிரைவர்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும். மேலும் அரசு பணிமனை அதிகாரிகள் தங்கள் பணிமனைக்கு உரிய பஸ்களில் இதுபோன்ற ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது. 

Next Story