மாவட்ட செய்திகள்

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 4 லட்சம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடிக்கு நாற்றங்கால் தயாரிப்பு பணி + "||" + 4 lakh ha of Thanjavur, Nagai and Tiruvarur Districts Nursery Preparation for Samba and Thaladi

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 4 லட்சம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடிக்கு நாற்றங்கால் தயாரிப்பு பணி

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 4 லட்சம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடிக்கு நாற்றங்கால் தயாரிப்பு பணி
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 4½ லட்சம் எக்டேர் சம்பா, தாளடி சாகுபடிக்கு நாற்றங்கால் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் முன்பட்ட குறுவை அறுவடை பணிகளும் தொடங்கி உள்ளது.
தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள்) டெல்டா பகுதி விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம்.


குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். குறிப்பட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி அதிக அளவில் நடைபெறும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் கல்லணைக்கு 22-ந் தேதி வந்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லும் நிலையை எட்டி உள்ளது. மேலும் இந்த தண்ணீரைக்கொண்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 694 ஏரி, குளங்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான குளங்களிலும் நீர் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 35 ஆயிரம் எக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 27 ஆயிரம் எக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 35 ஆயிரம் எக்டேரிலும் என மொத்தம் 97 ஆயிரம் எக்டேர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் முன்பட்ட குறுவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடிக்கான நாற்றங்கால் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேரில் சம்பாவும், 30 ஆயிரம் எக்டேரில் தாளடியும் என மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் எக்டேரில் சம்பாவும், 23 ஆயிரம் எக்டேரில் தாளடியும் என மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரம் எக்டேரிலும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் எக்டேரில் சம்பாவும், 30 ஆயிரம் எக்டேரில் தாளடியும் என மொத்தம் 1 லட்சத்து 61 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 4 லட்சத்து 47 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான நாற்றங்கால் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முத்துப்பேட்டை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் நேரடி நெல் விதைப்பு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். இதையடுத்து சம்பா நடவுப்பணிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதிக்கு பின்னர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.