திருக்காட்டுப்பள்ளியில் நெல் கொள்முதல் பணி பாதிப்பு சாக்கு தட்டுப்பாடு நீங்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


திருக்காட்டுப்பள்ளியில் நெல் கொள்முதல் பணி பாதிப்பு சாக்கு தட்டுப்பாடு நீங்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 9 Aug 2018 10:30 PM GMT (Updated: 9 Aug 2018 8:31 PM GMT)

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சாக்கு தட்டுப்பாடு காரணமாக நெல் கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சாக்கு தட்டுப்பாடு நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருக்காட்டுப்பள்ளி, சுக்காம்பார், கோவிலடி, திருச்சினம்பூண்டி, அலமேலுபுரம்பூண்டி, நாகாச்சி, விஷ்ணம்பேட்டை, பவனமங்கலம், ஒன்பத்துவேலி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி கோடை சாகுபடி நடந்தது.

கடந்த மாதம் (ஜூலை) முதல் கோடை நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவில் திறக்கப்படாததால், விவசாயிகள் நெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் குறைந்த விலைக்கே நெல் விற்பனையானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் திருக்காட்டுப்பள்ளி, விஷ்ணம்பேட்டை, பவனமங்கலம், நாகாச்சி, அலமேலுபுரம்பூண்டி உள்ளிட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன் காரணமாக கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. விளைவித்த நெல்லை, கொள்முதல் நிலையங்கள் முன்பாக வைத்துவிட்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால், சாக்கு தட்டுப்பாடு எப்போது நீங்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கும் ஒரு நாளைக்கு 500 முதல் 700 சாக்குகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இது போதாது. சாக்கு தட்டுப்பாடு காரணமாக நெல்லை விற்பனை செய்ய பல நாட்களாக கொள்முதல் நிலையம் முன்பாக காத்திருக்கிறோம்.

நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில் திறந்த வெளியில் நெல்லை கொட்டி வைத்திருப்பதால், மழையால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாக்கு தட்டுப்பாட்டை போக்கி, நெல் கொள்முதல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story