ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரிக்கு மீண்டும் தடை


ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரிக்கு மீண்டும் தடை
x
தினத்தந்தி 10 Aug 2018 5:02 AM IST (Updated: 10 Aug 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயத்தில் மீண்டும் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மண்டியா,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவழை தொடங்கியது. அதையடுத்து தொடர்ந்து பெய்த கனமழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. குறிப்பாக காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) முழுகொள்ளளவை எட்டியது.

இதனால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மண்டியா மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலய பகுதியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அங்கு சுற்றுலா பயணிகளுக்காக செயல்பட்டு வந்த படகு சவாரியும் நிறுத்தப்பட்டது. பின்னர் காவிரி ஆற்றில் படிப்படியாக தண்ணீர் குறைந்தது. அதன்பேரில் கடந்த மாதம்(ஜூலை) மீண்டும் ரங்கனத்திட்டு பகுதியில் படகு சவாரி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ரங்கனத்திட்டு பகுதியில் படகு சவாரிக்கு மீண்டும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் காவிரி கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றிப்பார்க்க தடை விதிக்கப்படவில்லை. அதனால் சுற்றுலா பயணிகள் அங்கு சுற்றிப்பார்க்கலாம்” என்று கூறினார். 

Next Story