மராத்தா சமுதாயத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம்


மராத்தா சமுதாயத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2018 5:41 AM IST (Updated: 10 Aug 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் மராத்தா சமுதாயத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு போராட்டம் நடத்தினர். வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை.

மும்பை,

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாய மக்கள் நேற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதையொட்டி மும்பையில் பாந்திரா கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு போராட்டம் நடத்தப்படும் என மராத்தா சமுதாயத்தினர் அறிவித்து இருந்தனர். இதன்படி காலை கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு அவர்கள் போராட்டம் செய்தனர்.

காட்கோபரில் மராத்தா சமுதாயத்தினர் பேரணி நடத்தினார்கள்.

முழு அடைப்பையொட்டி தாதர் உள்ளிட்ட சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மற்ற இடங்களிலும் கடைகள் திறந்து இருந்தன.

மும்பை, தானே, நவிமும்பையில் மின்சார ரெயில், மாநகராட்சி பஸ்கள், டாக்சி, ஆட்டோ ஆகியவை வழக்கம் போல் ஓடின. ஒரு சில பள்ளிகள் செயல்படவில்லை. பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளும் திறந்து இருந்தன. ஆனால் பள்ளிக்கூட பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதேபோல வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பரிதவித்தனர்.

மேலும் பாதுகாப்பு கருதி பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. இதன் காரணமாக மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.

கோலாப்பூரை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. பிரகாஷ் அபித்கர் இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மும்பையில் உள்ள சட்டசபை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

முழு அடைப்பையொட்டி மும்பையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 

Next Story