கோட்டூர் அருகே குளங்கள் நிரம்பாததால் சாகுபடி பணிகள் பாதிப்பு - விவசாயிகள் கவலை


கோட்டூர் அருகே குளங்கள் நிரம்பாததால் சாகுபடி பணிகள் பாதிப்பு - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 11 Aug 2018 4:30 AM IST (Updated: 11 Aug 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே குளங்கள் நிரம்பாததால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோட்டூர்,

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து கடந்த 22-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கினர். கோடை உழவு செய்திருந்த வயல்களில் நேரடி நெல் விதைப்புக்கான பணிகளில் ஈடுபட்டு கடந்த மாதம் கடைசி வாரத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகள் செய்தனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் 17ஆயிரம் எக்டேர் நிலத்தில் 80 சதவீத நேரடி நெல் விதைப்பு பணிகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடி, கூத்தாநல்லூர், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் விதைக்கப்பட்ட நெல் விதைகள் முளைக்க தொடங்கின. கடந்த ஒரு வாரமாக வெயில் கடுமையாக உள்ளது. இதனால் முளை கட்டிய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது அவசியமாகிறது. ஆனால் ஆறுகளில் வயல்களுக்கு நேரடியாக பாயும் அளவிற்கு போதுமான குளங்கள் நிரம்பவில்லை. இதனால் ஆறுகளின் பக்கத்தில் உள்ள வயல்களுக்கு மட்டுமே மோட்டார் பம்பு செட் மூலம் தண்ணீர் இறைத்து சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டூர் பகுதியில் வெண்ணாறு, கோரையாறு, பாமிணி ஆறு அதன் கிளை ஆறுகளான கடுவுருட்டி ஆறு, அரிச்சந்திரா நதி, முள்ளியாறு, அடப்பாறு, பொண்ணுகொண்டான் ஆறு, சாலுவன் ஆறு, கந்தப்பறிச்சான் ஆறு ஆகிய ஆறுகளின் மூலம் பாசன வசதிகள் பெறுகின்றன. மேட்டூர் அணை திறந்தபோது இந்த ஆறுகளில் கட்டுமானப்பணிகள், தூர்வாரும்பணிகள், குடிமராமத்து பணிகள் நடைபெற்றதால் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால் 30 சதவீத குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மற்ற குளங்கள் நிரம்பாததால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே ஆறுகளில் கூடுதலாக தண்ணீர் திறந்து கருகும் பயிரை காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story