சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் 2 பேர் கைது
திருச்சியில் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி,
திருச்சி மண்ணச்சநல்லூர் பனமங்கலத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 24). இவர், கடந்த மாதம் மதுரை பைபாஸ் சாலையில் மேக்குடி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், அவரிடம் ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்து தினேஷ்குமார் எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் அளித்தார். உறையூர் வண்டிக்காரத்தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(47). இவர் கடந்த ஏப்ரல் மாதம் உறையூர் வாலாஜா சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ராஜேஸ்வரி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றார்.
இதேபோல் பாலக்கரை இருதயபுரம் பகுதியில் ஒரு பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலியும், சுப்பிரமணியபுரம் சுந்தராஜ்நகர் பகுதியில் ஒரு பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியையும், பாலக்கரை மெயின் சாலையில் முதியவர் ஒருவரிடம் 2½ பவுன் தங்க சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
அதன்படி, தனிப்படை போலீசார் கடந்த 9-ந் தேதி பீமநகர் செடல் மாரியம்மன்கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியை சேர்ந்த பிரபு(22), பீமநகரை சேர்ந்த பெலிக்ஸ் நெப்போலியன்(21) என்பது தெரிய வந்தது. மேலும், இவர்கள் 2 பேரும் தான் மேற்கண்ட இடங்களில் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story