மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் அருகே பூமிக்கடியில் புதைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து எரிவாயு கசிவு, பொதுமக்கள் அச்சம் + "||" + Near Ramanathapuram Gas spill erupted in the grounds of the buried ONGC pipe

ராமநாதபுரம் அருகே பூமிக்கடியில் புதைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து எரிவாயு கசிவு, பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் அருகே பூமிக்கடியில் புதைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து எரிவாயு கசிவு, பொதுமக்கள் அச்சம்
ராமநாதபுரம் அருகே பூமிக்கடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதைத்திருந்த குழாய் வெடித்ததில் எரிவாயு கசிவு ஏற்பட்டது.
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட தெற்குக்காட்டூர் கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம், கெயில் நிறுவனம், அரசு, தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் எரிவாயு இருக்கும் பகுதியை கண்டறிந்து பூமிக்கடியில் குழாய்கள் பதித்து அதன் மூலம் தெற்குக்காட்டூரில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது.


இவ்வாறு சேகரிக்கப்பட்ட எரிவாயு அங்கேயே சுத்திகரிக்கப்பட்ட பின்னர் அருகில் உள்ள கெயில் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து அரசு, தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் தெற்குக்காட்டூரை சேர்ந்த சேதுராமன் மனைவி ஆறுமுகம், கண்ணன் ஆகியோர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது மண்எண்ணெய் வாசனையுடன் எரிவாயு வெளியேறுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கிராம தலைவர் சிவசாமி, மண்டபம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் தனபாலன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு ஓ.என்.ஜி.சி. அலுவலர்களுக்கு தெரியப்படுத்தியதும், அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் பம்புகள் அடைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். ஆனால் இரவு 7 மணிக்கு மேலும் குழாயில் இருந்து எரிவாயு கசிந்து கொண்டே இருந்தது.

இந்த எரிவாயு குழாய் திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, புதுமடம், ரெகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தெற்குக்காட்டூரில் விவசாய நிலங்கள் வழியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு வருகிறது. அவர்கள் எரிவாயு கசிவை உடனடியாக நிறுத்தாமல், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனராம். அதைதொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று இரவு 7 மணி வரை எரிவாயு கசிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராததால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்படி கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் ராமநாதபுரம் துணை தாசில்தார் சரவணன், வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் மகேஷ்வரன் ஆகியோர் விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதுகுறித்து தெற்குக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த சிவசாமி கூறியதாவது:- கடந்த 25 ஆண்டுகளாக எங்கள் கிராம மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் எரிவாயு குழாய் பலமுறை சேதமடைந்துள்ளது. ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நடத்தும் கூட்டங்களில் நாங்கள் கலந்து கொண்டு குழாய்கள் பழுதடைந்துள்ளதால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கிராமத்தின் வழியாக செல்லும் எரிவாயு குழாய்களை முற்றிலும் அகற்றவேண்டும். புதிதாக இப்பகுதியில் குழாய்கள் பதிக்கக் கூடாது என்று பலமுறை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் அதற்கு அதிகாரிகள் உரிய பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் ஆபத்து நிகழாது என்றும் தெரிவிக்கின்றனர்.

எங்கள் பகுதியை சுற்றிலும் உள்ள 7½ கிராம மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளாததால் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த குழாய் சேதமடைந்து ஆபத்தான சூழல் உருவாகி உள்ளதை நிலத்தின் உரிமையாளர் சேதுராமன் மனைவி ஆறுமுகம் என்பவர் தெரிவித்தார். நாங்கள் இதுபற்றி சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்தும் இரவு 7 மணி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. தற்போது வரை குழாயில் இருந்து அதிக வேகத்துடன் எரிவாயு கசிந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.