நாகர்கோவிலில் பரபரப்பு: பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீச்சு - அதிகாரி விசாரணை


நாகர்கோவிலில் பரபரப்பு: பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீச்சு - அதிகாரி விசாரணை
x
தினத்தந்தி 11 Aug 2018 4:32 AM IST (Updated: 11 Aug 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பச்சிளம் பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் பச்சிளம் பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில் வடசேரி அறுகுவிளை அங்கன்வாடி மையம் அருகே ரோட்டோரம் ஒரு குப்பை தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டியில் இருந்து நேற்று காலை ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். பின்னர் குப்பை தொட்டிக்குள் பார்த்தபோது அங்கு ஒரு அழகான பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது. குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருந்த நிலையில் கனத்த மனதுடன் அந்த குழந்தையை யாரோ குப்பை தொட்டியில் வீசியுள்ளனர். குழந்தையின் கணீரென்ற அழுகுரலை கேட்டதும் மனமுருகிய அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உடனே குழந்தையை தூக்கினர். பின்னர் இதுபற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். ஆனால் குழந்தை பசியால் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. அதைத் தொடர்ந்து சில பெண்கள் சேர்ந்து குழந்தையின் அழுகையை நிறுத்த தாழாட்டினர். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதற்கிடையே குப்பை தொட்டியில் வீசியதில் குழந்தைக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டு இருக்குமோ? என்று சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து வடசேரியில் உள்ள நகர்புற சுகாதார நிலைய டாக்டர் அஜயமஞ்சுக்கு, போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் குழந்தையை டாக்டர் அஜயமஞ்சு பரிசோதனை செய்தார். அப்போது எந்த விதமான நோய் பாதிப்பும் இன்றி குழந்தை ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது. அதோடு குழந்தை நகர்புற சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பால் ஊட்டப்பட்டது. அதன் பிறகு தான் குழந்தை அழுகையை நிறுத்தியது.

இதுபற்றி டாக்டர் அஜயமஞ்சுவிடம் கேட்டபோது, “குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை பிறந்து எப்படியும் 10 மணி நேரம் தான் ஆகியிருக்கும். நள்ளிரவில் குழந்தை பிறந்திருக்கலாம். தொப்புள் கொடி கூட சரியாக அகற்றப்படவில்லை. குழந்தை 2 கிலோ 700 கிராம் எடையில் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது“ என்றார்.

இதனையடுத்து குழந்தை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தைகள் வார்டில் அனுமதித்து குழந்தையை டாக்டர்கள் பராமரித்து வருகிறார்கள்.

ஆனால் குழந்தையை 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தாய் யார்? பிறந்து சில மணி நேரங்கள் கூட ஆகாத நிலையில் குழந்தையை குப்பை தொட்டியில் எதற்காக வீசினார்கள்? தாயே குழந்தையை குப்பையில் போட்டாரா? என்ற விவரம் முதலில் தெரியாமல் இருந்தது. எனவே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி குமுதா விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே ஒரு தம்பதியினர் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் குழந்தைகள் நல அதிகாரி குமுதாவை சந்தித்து, குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தங்களுடையது என்று கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் அதை நம்பவில்லை. ஏன் எனில் குழந்தை, தங்களுக்கு பிறந்தது தான் என்பதை அந்த தம்பதியால் நிரூபிக்க இயலவில்லை.

இதுபற்றி குழந்தைகள் நல அதிகாரி குமுதாவிடம் கேட்டபோது, “குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தையின் பெற்றோர் என்று கூறி ஒரு பெண்ணும், ஆணும் வந்த னர். குடும்ப சூழ்நிலை காரணமாகவும், ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருப்பதாலும் வளர்க்க இயலாமல் குழந்தையை குப்பை தொட்டியில் போட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் தற்போது மீட்கப்பட்ட குழந்தையை தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைக்கும்படியும் அவர்கள் கூறினர். ஆனால் குழந்தைக்கு அவர்கள்தான் உண்மையான பெற்றோர் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. ஏன் என்றால் குழந்தையின் தாய் என்று கூறுபவர் கர்ப்பமாக இருந்தது அக்கம் பக்கத்தினருக்கு கூட தெரியவில்லை. மேலும் குழந்தை தங்களுடையது தான் என்பதற்கான ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது“ என்றார்.

Next Story