13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்


13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Aug 2018 11:50 PM GMT (Updated: 10 Aug 2018 11:50 PM GMT)

மழை குறைவாக பெய்துள்ள 13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 29-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பீதரில் நேற்று முன்தினம் பிரசாரத்தை தொடங்கினார். அவர் தேர்தல் பிரசாரம் செய்ய நேற்று யாதகிரிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளது. அந்த மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மாநில அரசு உடனடியாக அந்த 13 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். அங்கு தேவையான வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) அரசு அமைந்து 3 மாதங்கள் ஆகிறது. ஆனால் இந்த கூட்டணி அரசு இன்னும் செயல்பட தொடங்கவில்லை. அரசு ஊழியர்கள் பணி இடமாற்றத்தில் அதிகளவில் முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதை தவிர்த்து வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி சொன்னார். அதை இன்னும் செய்யவில்லை. விவசாயிகளை குமாரசாமி ஏமாற்றுகிறார்.

விவசாயிகளின் கஷ்டங் களை தீர்ப்பதில் இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை. மாநிலத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் விவசாயத்துறை மந்திரி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கோ அல்லது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கோ சென்று ஆய்வு நடத்தவில்லை. நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை.

இந்த அரசு பொறுப்புடன் செயல்படவில்லை. ஆட்சி எந்திரம் முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் இதுபற்றி பேசவில்லை. தவறான ஆட்சி நிர்வாகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

Next Story